

வாஷிங்டன்,
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் பைரன் நகரைச் சேர்ந்த 'ஹோப்' என்ற கழுதை, உலகின் மிக நீளமான வால் கொண்ட கழுதை என்ற புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்து அசத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஹன்னா ப்ராஸ்ட் என்பவர் 'ஹோப்' என்ற பெயரில் அரிய வகை அமெரிக்கன் மம்மத் ஜாக்ஸ்டாக் இன கழுதையை வளர்த்து வருகிறார். இந்த கழுதையின் வால் வழக்கத்திற்கு மாறாக மிகவும் நீளமாக வளர்ந்திருந்தது.
இதையடுத்து, கால்நடை மருத்துவர்கள் மற்றும் கின்னஸ் சாதனை குழுவினர் முன்னிலையில் ஹோப்பின் வால் அளவிடப்பட்டது. அதில், அதன் வால் 50.73 சென்டிமீட்டர் (சுமார் 20 அங்குலம்) நீளம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக நீளமான கழுதை வால் என்ற கின்னஸ் சாதனையை 'ஹோப்' தன்வசப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்த கழுதை, சுமார் 15 அங்குல நீளமுள்ள காதுகளுடன் 'உலகின் மிக நீளமான காதுகள் கொண்ட கழுதை' என்ற கின்னஸ் சாதனையையும் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020-ம் ஆண்டு மிகவும் மெலிந்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த கழுதை, உரிமையாளரின் அன்பான பராமரிப்பால் குணமடைந்து தற்போது அடுத்தடுத்து உலக சாதனைகளைப் படைத்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.