பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் - ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் - ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மந்தமான வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதார நிலைமையை கையாளுவது பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இந்த நிலையில், நிதி நெருக்கடியால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23 ஆயிரத்து 800 கோடி) கடனாக வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் நிதி அமைச்சகத்துக்கும், ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

பிரதமர் இம்ரான்கானின் நிதி ஆலோசகரான அப்துல் ஹபீஸ் ஷேக் இது பற்றி கூறுகையில், பாகிஸ்தானின் நிதி பிரச்சினையை சமாளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்குகிறது. இதில் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நடப்பு நிதி ஆண்டில் கிடைக்கும் என கூறினார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், நிதி ஆலோசகர் அப்துல் ஹபீஸ் ஷேக்கை தொடர்பு கொண்டு பேசிய ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் வெர்னர் லெய்பாச், பாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் ஆசிய வளர்ச்சி வங்கி செய்ய தயாராக இருக்கிறது என கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வெளிநாட்டு கடன் சுமைகளை குறைப்பதற்காக பாகிஸ்தானுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.42 ஆயிரம் கோடி) வழங்க சர்வதேச நிதியம் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com