‘டிராகன்’ குறித்து ஆய்வு நடத்த கோரி நியூசிலாந்து பிரதமருக்கு ரூ.225 லஞ்சம் கொடுத்த சிறுமி

‘டிராகன்’ குறித்து ஆய்வு நடத்த கோரி சிறுமி ஒருவர் நியூசிலாந்து பிரதமருக்கு ரூ.225 லஞ்சம் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
‘டிராகன்’ குறித்து ஆய்வு நடத்த கோரி நியூசிலாந்து பிரதமருக்கு ரூ.225 லஞ்சம் கொடுத்த சிறுமி
Published on

வெலிங்டன்,

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்த கடிதத்தில், தான் டிராகன்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் டிராகன் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து, அனுப்பினாள்.

சிறுமியின் இந்த கடிதத்தை வேடிக்கையாக நினைத்து, புறக்கணிக்காமல் பிரதமர் ஜெசிந்தா தனது கைப்பட கடிதம் எழுதி, அவளுக்கு பதில் அனுப்பினார்.

அதில் அவர், டிராகன்கள் மற்றும் உளவியல் குறித்த உங்களது ஆலோசனைகளை கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது குறித்து எந்த பணிகளையும் நாங்கள் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

மேலும், நீங்கள் அளித்த லஞ்சத்தை என்னால் ஏற்று கொள்ளமுடியாது. அதனால் அதை திருப்பி தந்துவிடுகிறேன். எனினும் டிராகன்கள் மற்றும் நுண்ணுணர்வு குறித்த உங்களது தேடல் சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அந்த கடிதத்தில் ஜெசிந்தா குறிப்பிட்டு இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com