

திம்பு,
தெற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பூடானில், கடந்த 2008-ம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 3-வது முறையாக கடந்த ஆண்டு அங்கு ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடைபெற்றது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரு கட்டங்களாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் மருத்துவராக இருந்து அரசியலுக்கு வந்த லோட்டே ஷெரிங் வெற்றி பெற்று பிரதமரானார். நாட்டின் பிரதமர் ஆன போதும், மருத்துவ பணியில் தீரா காதல் கொண்ட லோட்டே ஷெரிங், மருத்துவராக தனது பணியை தொடர்ந்து வருகிறார். வாரத்தின் முதல் 5 நாட்களில் பிரதமராக நாட்டு பிரச்சினைகளை சமாளிக்கும் லோட்டே ஷெரிங், சனிக்கிழமையில் மருத்துவராக நோயாளிகளின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கிறார்.
அந்நாட்டின் தலைநகர் திம்புவில் உள்ள ஜிக்மி டோர்ஜி வாங்ஜூக் தேசிய மருத்துவமனையில் வாரந்தோறும் சனிக் கிழமைகளில் மருத்துவராக பணியாற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சைகளையும் செய்து வருகிறார்.
இதுகுறித்து லோட்டே ஷெரிங் கூறுகையில், சிலர் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க கோல்ப் விளையாடுகிறார்கள், சிலர் வில்வித்தை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அதே போல தான் நான் மருத்துவம் செய்கிறேன். இதனை எனது கடைசி காலம் வரை தொடர்ந்து செய்வேன் என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.