

கார்டூம்,
சூடானில் உமர் அல் பஷீர் அதிபராக இருந்து வந்தார். அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அங்கு நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். இதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் மூண்டன. முடிவில் கடந்த ஏப்ரல் மாதம் ராணுவம் அவரது ஆட்சியை கவிழ்த்தது. இருப்பினும் கடந்த ஜூலை மாதம் மிலிட்டரி கவுன்சிலும், எதிர்க்கட்சி கூட்டணியும் அதிகார பகிர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டன. அதன் விவரங்கள் தெரிய வரவில்லை. இந்த நிலையில், புதிய இடைக்கால அரசை ஏற்படுத்த ஏற்ற வகையில் அரசியல் சாசன அறிவிப்பு வெளியிட ராணுவ கவுன்சிலும், எதிர்க்கட்சி கூட்டணியும் உடன்பாட்டை எட்டியுள்ளன. இதை ஆப்பிரிக்க கூட்டமைப்பின் மத்தியஸ்தர் முகமது ஹசன் லெபாட் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், இது தொடர்பான வழிமுறைகளை வகுப்பதற்கு தொடர் கூட்டங்கள் நடத்தப்படும் என கூறினார்.
அதிகார பகிர்வு தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. அதிகார பகிர்வு 39 மாதங்களுக்கு அமலில் இருக்கும். ஒரு ஆட்சிக்கவுன்சில், மந்திரிசபை, நாடாளுமன்றம் அமைக்கப்படும். ஜனநாயக ஆதரவு இயக்கத்தில் இருந்து ஒருவர் பிரதமர் பதவிக்கு வருவார். ராணுவம், உள்துறை மந்திரி பதவி ராணுவத்துக்கு அளிக்கப்படும்.