

பிரேசிலியா,
பிரேசில் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஜெயிர் போல்சொனரோ வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி பதவி ஏற்கிறார்.
இதையடுத்து அந்த நாட்டின் புதிய நீதித்துறை மந்திரி பதவிக்கு, அவர் ஊழல் தடுப்பு கோர்ட்டு நீதிபதி செர்ஜியோ மோரோவை தேர்வு செய்துள்ளார். அவரை தேர்வு செய்தது குறித்து ஜெயிர் போல்சொனரோ கருத்து தெரிவிக்கையில், நமது அரசைப் போன்றதொரு அரசில் செர்ஜியோ மோரோ மிக முக்கியத்துவம் வாய்ந்தவர் ஆவார். அவரை நீதித்துறை மந்திரி பதவி ஏற்குமாறு கேட்டுக்கொண்டோம். அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது ஊழல் தடுப்பு, அமைப்பு ரீதியிலான குற்ற தடுப்பு, அரசியல் சாசனம் மீது அவர் காட்டும் மரியாதை நமக்கு வழிகாட்டும் கொள்கையாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
நீதித்துறை மந்திரி பதவி ஏற்க இருப்பது பற்றி நீதிபதி மோரோ கூறும்போது, நாட்டின் நீதித்துறையையும், பொதுமக்கள் பாதுகாப்பையும் கவனித்துக்கொள்ளும் மந்திரி பொறுப்புக்கு என்னை தேர்வு செய்தது, எனக்கு கிடைத்துள்ள கவுரவம் ஆகும் என கூறினார்.
இவர் அந்த நாட்டில் அரசியல் தலைவர்கள் செய்த பல ஊழல்களை கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.