

பீஜிங்,
கொரோனா வைரஸ் தொற்று நோயின் முகவரியாக மாறிய நகரம், சீனாவின் மத்திய நகரமான உகான். அங்கு கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக இந்த தொற்று நோய் பரவத்தொடங்கியது. அங்கிருந்து படிப்படியாக பிற நகரங்களுக்கு பரவத்தொடங்கியது.
இப்போது உலகின் 185 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று நோய் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரை தாக்கி உள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது.
சீனாவை பொறுத்தமட்டில் 82 ஆயிரத்து 830 பேரை தாக்கி உள்ளது. இது நேற்று முன்தின நிலவரம். பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 633 ஆக இருக்கிறது. அன்று ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
77 ஆயிரத்து 944 பேர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்டனர்.
727 பேர் சீன நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 80 பேர் சிகிச்சைக்கு பின்னர் ஆஸ்பத்திரிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடுகளுக்கு மகிழ்ச்சி பொங்க திரும்பியுள்ளனர்.
அவர்களில் ஒருவர், உகான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த டிங் (வயது 77) ஆவார். இவர்தான் அந்த நகரின் கடைசி கொரோனா வைரஸ் தொற்றுநோயாளி. அவர் பரிபூரண குணம் அடைந்து நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பி உள்ளார். இதை சீன தேச தேசிய சுகாதார கமிஷனின் செய்தி தொடர்பாளர் மி பெங் தெரிவித்தார்.
டிங் குணம் அடைந்த பின்னர் இரண்டாவது முறையாக பரிசோதிக்கப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று வந்துள்ளதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உகான் நகருக்கு இது ஒரு மைல் கல் என்று சொல்லப்படுகிறது. அந்த நகரில் 38 ஆயிரத்து 20 பேர் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். இப்போது ஒருவர் கூட ஆஸ்பத்திரியில் இல்லை என்பது வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது என அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் ஷாங் யூ தெரிவித்தார்.
இந்த நாளுக்காகத்தான் நாங்கள் இத்தனை நாளும் காத்திருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உகான் நகரம் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி முதல் ஊரடங்கால் பூட்டி வைக்கப்பட்டது. இது 76 நாட்களுக்கு நீடித்தது. இங்கு கொரோனா நோயாளிகளுக்காக சிறப்பு ஆஸ்பத்திரிகள் அடையாளம் காணப்பட்டன. 16 தற்காலிக ஆஸ்பத்திரிகள் நிறுவப்பட்டன. 60 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் இருந்து உகான் உள்ளிட்ட ஹூபெய் மாகாணத்துக்கு மாத்திரமே 42 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 நாட்களாக இந்த மாகாணத்தில் ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா வைரஸ் தொற்றவில்லை. இயல்பு வாழ்க்கைக்கு மாகாணம் திரும்பி உள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் 98.2 சதவீத பணியாளர்கள் பணிக்கு திரும்பி விட்டனர். பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.