துருக்கியின் தாக்குதலை தடுப்பதற்காக சிரியா அதிபருடன் குர்து போராளிகள் புதிய கூட்டணி முக்கிய நகரை விட்டுக்கொடுத்தனர்

சிரியா எல்லையில் துருக்கியின் தாக்குதலை தடுப்பதற்காக குர்து போராளிகள், அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் புதிய கூட்டணியை அமைத்து உள்ளன.
துருக்கியின் தாக்குதலை தடுப்பதற்காக சிரியா அதிபருடன் குர்து போராளிகள் புதிய கூட்டணி முக்கிய நகரை விட்டுக்கொடுத்தனர்
Published on

டமாஸ்கஸ்,

சிரியாவில் 2011ம் ஆண்டு, மார்ச் 15ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் தொடங்கியது. 9வது ஆண்டாக அது நீடிக்கிறது.

இந்த உள்நாட்டுப் போரைப் பயன்படுத்தி அங்கே காலூன்றிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதற்காக அமெரிக்கா 2 ஆயிரம் படை வீரர்களை சிரியாவுக்கு அனுப்பியது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் மீது அமெரிக்க படையினர் தொடர் தாக்குதல்கள் நடத்தி அவர்களது கட்டுப்பாட்டில் இருந்து பல நகரங்களை மீட்டனர்.

இந்தநிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த 19ந் தேதி, சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை வீழ்த்தி விட்டோம், அமெரிக்க படைகள் அங்கிருந்து திரும்பப்பெறப்படுகின்றன என்ற அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.

இது உலக அரங்கை உலுக்கியது. அமெரிக்க படைகள் வாபஸ், சிரியாவில் மீண்டும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும் என விமர்சனங்கள் எழுந்தன.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினை அமெரிக்கா வீழ்த்துவதற்கு சிரியாவில் குர்து போராளிகள் பக்க பலமாக இருந்தனர். அமெரிக்கா படைகளை திடீரென வாபஸ் பெறுவதாக அறிவித்து, தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.

குர்து போராளிகள், தென் துருக்கி எல்லையில் தன்னாட்சி பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக 30 ஆண்டுகளாக போராடி வருகிற நிலையில், அவர்களை பயங்கரவாதிகள் என கூறி துருக்கி தடை செய்துள்ளது.

சிரியாவில் இருந்து படைகள் வாபஸ் என்று அமெரிக்கா அறிவித்ததும், இதுதான் சமயம் என துருக்கி அதிபர் எர்டோகன் முடிவுக்கு வந்து, குர்து போராளிகளை ஓழித்துக் கட்ட வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்.

சிரியா, துருக்கி எல்லையில் குர்து போராளிகள் தன்னாட்சி பிரதேசத்தை கட்டமைத்து விடக்கூடாது என்பதில் அவர் தீவிரமாக இருக்கிறார்.

இந்தநிலையில் சிரியா அரசுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு குர்து போராளிகள் தள்ளப்பட்டனர்.

அமெரிக்க படை விலகலால், தங்களுக்கு எதிராக இப்போது துருக்கி படைகள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், ரஷியா மற்றும் ஈரான் ஆதரவை பெற்றுள்ள சிரியா படைகளுடன் கூட்டு சேர்ந்தால் மட்டுமே துருக்கியின் தாக்குதலை தடுக்க முடியும் என்பதுதான் குர்து போராளிகள் நிலை.

அதன் ஒரு அங்கமாக சிரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மான்பிஜ் நகரை அவர்கள் சிரியா படைகளுக்கு விட்டுக்கொடுத்து விட்டனர். அங்கிருந்து குர்து போராளிகள் விலகிக்கொண்டு அங்கு சிரியா படைகளை வரவழைத்துள்ளனர்.

சிரியா படைகளும் அந்த நகரத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக நுழைந்து இருக்கின்றன. அங்கு சிரியா படைகள் கொடியை ஏற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் புதிய கூட்டணியை அமைத்துள்ள குர்து போராளிகளை இனி துருக்கி என்ன செய்யும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்று உலக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com