

வாஷிங்டன்,
அமெரிக்காவில் உளவுப்படை தலைவராக பதவி வகித்து வந்த டான் கோட்ஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து தற்போது தற்காலிகமாக அந்த பதவியை ஜெர்மனிக்கான முன்னாள் தூதர் ரிச்சர்ட் கிரேனல் வகித்து வந்தார். ஆனால் அவருக்கு போதுமான அனுபவம் இல்லை, அது மட்டுமின்றி அரசியல் ரீதியில் செயல்படக்கூடியவர் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்தநிலையில் உளவுப்படைத்தலைவர் பதவிக்கு சர்ச்சைக்குரிய குடியரசு கட்சி எம்.பி. ஜான் ராட்கிளிப்பியை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார். 53 வயதான இவர் டிரம்பின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவரை தேர்வு செய்தது குறித்து டிரம்ப் கூறுகையில், ஜான் ராட்கிளிப்பி மிகச்சிறப்பானவர், அதிக திறமை வாய்ந்தவர் என குறிப்பிட்டார்.
இவரது நியமனத்துக்கு செனட் சபையின் உளவுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.