

லண்டன்,
இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்று புதிய வகை கொரோனா வைரஸ் அண்மையில் கண்டறியப்பட்டது. இதனால் இங்கிலாந்து உடனான விமானம், ரெயில் போக்குவரத்துகளை பல நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன. மேலும் சில நாடுகளிலும் இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சில நாடுகளில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய வகை கொரோனா குறித்த அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த உருமாற்றம் பெற்ற கொரோனாவின் தன்மைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் கேபிரியேசஸ் கூறும்போது, வைரஸ் கிருமி உருமாற்றம் அடைவது என்பது இயற்கையானது. இதுபோன்ற மாற்றங்கள் வரும் என்பது எதிர் பார்த்ததுதான். ஆனால் இதுபற்றி சரியான தகவல்கள் இல்லாமல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாதங்களை செய்கிறார்கள்.
இங்கிலாந்தில் இருந்து வந்துள்ள அறிக்கையில் இந்த வைரசின் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது என்றே கூறியுள்ளனர். ஆனால் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இதுவரை எந்த மருத்துவ ஆதாரமும் தென்படவில்லை என்று கூறினார்.
இந்த வைரசை பொறுத்த வரையில் தற்போது கொரோனாவுக்காக நடத்தப்பட்டு வரும் சாதாரண பி.சி.ஆர். பரிசோதனை முறையிலேயே கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள் இதை கட்டுப்படுத்துமா என்பது போக போகத்தான் தெரியும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.