அமெரிக்க நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பைடன் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஜோ பைடன் வெற்றி பெற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பைடன் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள டிரம்ப் மறுத்து வரும் சூழலில், மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும்படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20ந்தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டது. பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் கூறினார்.

சான்றிதழ் வழங்குவதற்கான ஒப்புதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் பணிகள் நாடாளுமன்றத்தில் நடந்தன. இதற்காக உறுப்பினர்கள் வருகை தந்தனர். இந்நிலையில், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர். இதனிடையே டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், தயவு செய்து தொண்டர்கள் அமைதி காக்கவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம் நாட்டின் பக்கம் தான் இருக்கிறார்கள் என பதிவிட்டார்.

தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் கேபிடால் நகர போலீசார் ஈடுபட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது நேற்று மதியம் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அதில் பெண் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்து உள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற கட்டிடம் பாதுகாப்புடன் உள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த போராட்டம் பற்றி டிரம்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பல்வேறு பதிவுகள் வெளிவந்தன. இதனால், தொடர்ந்து வன்முறை பரவி விடாமல் தடுக்கும் வகையில், டிரம்பின் 3 டுவிட்டர் பதிவுகளை அந்த நிறுவனம் நீக்கியுள்ளது. அவற்றில் தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றுவது போன்று வெளியான வீடியோ ஒன்றும் நீக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, குடிமக்கள் ஒற்றுமை அல்லது வன்முறை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்புடைய டுவிட்டரின் கொள்கை விதிகளை மீறும் வகையிலான செயல்கள் வருங்காலத்தில் நடைபெற்றால், டொனால்டு டிரம்பின் கணக்கு நிரந்தரம் ஆக முடக்கப்படும் என்றும் டுவிட்டர் தெரிவித்து உள்ளது.

பேஸ்புக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றிய வீடியோவை நீக்கியுள்ளது.

இதுபற்றி பேஸ்புக் நிறுவன ஒருமைப்பாடு துணை தலைவர் கை ரோசன் கூறும்பொழுது, வீடியோவை நாங்கள் நீக்கியுள்ளோம். ஏனெனில், அது நடந்து வரும் கலகங்களை மறைப்பதற்காக அல்ல. ஓரளவு வன்முறை கட்டுக்குள் வருவதற்கான சமநிலையை அது ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் நிறுவனமும் டிரம்பின் கணக்கை 24 மணிநேரம் முடக்கம் செய்துள்ளது.

இதுபற்றி அந்நிறுவனத்தின் தலைவர் ஆடம் மொஸ்சேரி கூறும்பொழுது, அதிபர் டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு பக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், எங்களுடைய நிறுவனத்தின் 2 கொள்கை விதிகளை மீறியுள்ளது தெரிய வந்துள்ளது.

அதனால், அந்த கணக்கு 24 மணிநேரம் முடக்கப்படுகிறது. அந்த நேரத்தில், சமூக பக்கத்தில் அவரால் பதிவு எதுவும் பதிவுகளை வெளியிட முடியாது என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சம்பவம் பற்றி போலீசார் கூறும்பொழுது, போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் கதவை உடைத்து அத்துமீறி நுழைய முயன்றனர். அந்த கும்பல் மீது நடத்தப்பட்ட போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இதேபோன்று மருத்துவ சிகிச்சையில் பலனின்றி 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, கலகத்துடன் தொடர்புடைய 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தலில் பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் மீண்டும் நடந்தன. இதற்காக இரு அவையை சேர்ந்த உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு வந்தனர்.

இதன்பின்னர் துணை அதிபர் மைக் பென்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எலக்டோரல் காலேஜ் அளித்த வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நாடாளுமன்றம் ஏற்று கொண்டு உறுதி செய்துள்ளது. இதனால், கடந்த நவம்பர் 3ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஜனநாயக வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார் என அறிவித்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் எலக்டோரல் காலேஜ் என்பது அதிபரை தேர்வு செய்ய கூடிய தேர்வாளர்களை கொண்ட ஒரு குழுவாகும். அரசியலமைப்புக்கு தேவையான அவர்கள் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தலின்பொழுது ஒன்றாக கூடுவார்கள்.

இந்த குழுவினர் அளிக்கும் ஓட்டுகளுக்கு ஏற்ப பெரும்பான்மை வாக்குகளை பெறும் அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இந்த சூழலில் கடந்த நவம்பரில், அதிபராக பைடனை எலக்டோரல் காலேஜ் தேர்வு செய்கிறதென்றால், அது பெரிய தவறாகி விடும் என கூறிய டிரம்ப், இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. உயர்மட்ட அளவில் மோசடிகள் நடந்துள்ளன என கூறினார்.

இந்நிலையில், எலக்டோரல் காலேஜ் முடிவுகளின்படி, பைடனுக்கு ஆதரவாக 306 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்புக்கு ஆதரவாக 232 ஓட்டுகளும் கிடைத்து உள்ளன. இதன் முடிவுகளுக்கு ஏற்ப பைடன் வெற்றியாளர் என நாடாளுமன்றம் முறைப்படி சான்றளித்து உள்ளது.

இதனால் வருகிற 20ந்தேதி நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஜோ பைடன் அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்று கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com