பால் தொழிற்சாலையில் ஆனந்த பால் குளியல் போட்ட நபர்; வைரலானது வீடியோ

துருக்கி நாட்டில் பால் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தொட்டியில் மூழ்கி ஊழியர் ஒருவர் ஆனந்த பால் குளியல் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பால் தொழிற்சாலையில் ஆனந்த பால் குளியல் போட்ட நபர்; வைரலானது வீடியோ
Published on

அங்காரா,

துருக்கி நாட்டின் மத்திய அனடோலியன் மாகாணத்தில் கொன்யா நகரில் பால் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதில் எம்ரி சாயர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ஆலையில் உள்ள பால் நிரப்பிய தொட்டி ஒன்றில், எம்ரி படுத்தபடி பாலை எடுத்து தலையில் ஊற்றி கொண்டு ஆனந்த குளியல் போட்டுள்ளார்.

இதனை டிக்டாக் வீடியோவில் உகுர் துர்கட் என்ற மற்றொரு நபர் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதனை தொடர்ந்து ஆலை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், இந்த சம்பவத்திற்கு பின் துர்கட் உடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடித்து கொள்ளப்பட்டது. பால் குளியலில் ஊழியர் ஈடுபடவில்லை. நீர் மற்றும் தூய்மைப்படுத்தும் திரவம் கலந்த கலவை தொட்டியில் நிரப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த திரவம் உண்மையில் பாய்லர்களை சுத்தம் செய்ய பயன்படுவது ஆகும். எங்களது நிறுவனத்தின் புகழை கெடுக்க இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தது.

எனினும், கொன்யா நகர வேளாண் மற்றும் வன துறை மேலாளர் அலி எர்கின் சம்பவம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். தொழிற்சாலையை மூடவும் உத்தரவிட்டார். மனிதர்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் சூழலால் ஆலை இயங்க தடை விதிக்கப்படுகிறது என அவர் கூறினார். ஆலைக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com