பாகிஸ்தானில் பயங்கரம் போலீஸ் உயர் அதிகாரி, தற்கொலைப்படை தாக்குதலில் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த பெஷாவர் நகரில் கூடுதல் போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர், அஷ்ரப் நூர்.
பாகிஸ்தானில் பயங்கரம் போலீஸ் உயர் அதிகாரி, தற்கொலைப்படை தாக்குதலில் பலி
Published on

பெஷாவர்,

இவர் நேற்று தனது பணியின் நிமித்தமாக ஒரு வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பெஷாவர் நகரில் பயணம் செய்தார். அந்த வாகனம், ஜார்கூனி மசூதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனம் மீது, தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் பயங்கரமாக மோதினார். அத்துடன் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கவும் செய்தார். குண்டுகள் வெடித்து சிதறி அந்த வாகனம் தீப்பற்றி எரிந்தது.சினிமா காட்சி போல நடந்த இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே குலுங்கியது. கட்டிடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்து சிதறின. மரங்களில் தீப்பிடித்தது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஐ.ஜி. அஷ்ரப் நூர், சம்பவ இடத்திலேயே பலி ஆனார். அவரது பாதுகாவலர் ஹபிபுல்லாவும் உயிரிழந்தார். 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகளும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு பலியான ஐ.ஜி. மற்றும் அவரது பாதுகாவலரின் உயிர் தியாகத்தை அவர் மெச்சினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com