பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் தொலைபேசியில் பேச்சு விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடியுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடியூ தொலைபேசியில் பேசினார். அப்போது விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் தொலைபேசியில் பேச்சு விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை
Published on

ஒட்டாவா,

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம், இந்தியாவை கடந்து பல்வேறு உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. எனவே இது தொடர்பாக பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் விவசாயிகள் போராட்டத்தால் எழுந்துள்ள சூழல் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடியூ கடந்த டிசம்பர் மாதம் கவலை வெளியிட்டு இருந்தார். மேலும் உரிமைக்காக அமைதியான முறையில் நடந்து வரும் போராட்டங்களுக்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தியா எச்சரிக்கை

கனடா பிரதமரின் இந்த கருத்து, இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனவே இந்தியாவுக்கான கனடா தூதர் நதிர் படேலுக்கு சம்மன் அனுப்பிய வெளியுறவுத்துறை அமைச்சகம், விவசாயிகள் போராட்டத்தில் கனடா பிரதமரும், மந்திரிகளும் தலையிடுவது ஏற்க முடியாது எனக்கூறியது. இது தொடர்ந்தால் இரு நாட்டு உறவில் தீவிர பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டங்கள் நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் மற்றும் ஆலோசனைக்குப்பின் கொண்டு வரப்பட்டது எனவும், இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு மிகுந்த பலனை ஏற்படுத்தும் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.

இரு தலைவர்களும் ஆலோசனை

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடியூ நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜனநாயக கொள்கைகளில் இரு நாடுகளின் உறுதிப்பாடு, சமீபத்திய போராட்டம், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முக்கியத்துவம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக கனடா பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

மேலும் கொரோனாவுக்கு எதிராக இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டதுடன், இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு முயற்சிகள் மற்றும் அது உலக நாடுகளுக்கு மிகுந்த உதவியாக இருப்பது குறித்தும் இருவரும் விவாதித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

சிறப்பாக இருந்தது

பிரதமர் மோடியுடனான பேச்சு சிறந்த முறையில் அமைந்ததாகவும், இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் கனடா பிரதமரும் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த உரையாடல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியாவிடம் இருந்து கனடாவுக்கு தேவைப்படும் தடுப்பூசிகள் குறித்து டிரூடியூ தெரிவித்ததாகவும், அதற்கு இந்தியா உதவும் என பிரதமர் மோடி உறுதியளித்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com