ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் 31-ந் தேதியுடன் நிறைவு பெறும் - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் 31-ந் தேதியுடன் நிறைவு பெறும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் 31-ந் தேதியுடன் நிறைவு பெறும் - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
Published on

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ஆம் தேதிக்குள் அங்கிருந்து முழுமையாக வெளியேறும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார்.

அதன்படி கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க தொடங்கிய நிலையில் கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.

இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின. இதற்கிடையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர்.

இதற்காக தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மக்கள் அலை அலையாக திரள்வதால் ஒரு வாரத்துக்கும் மேலாக அங்கு தொடர்ந்து பதற்றமும் குழப்பமும் நீடித்து வருகிறது.

எனினும் அமெரிக்கா தனது போர் விமானங்கள் மூலம் காபூலில் உள்ள அமெரிக்க குடிமக்களையும், நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களையும் கூட்டம் கூட்டமாக மீட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசமாகி 10 நாட்களாகி இருக்கும் நிலையில் சுமார் 70 ஆயிரம் பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.

காபூலில் இருந்து வெளிநாட்டினரையும், ஆப்கானிஸ்தான் மக்களையும் வெளியேற்றுவதற்காக அங்குள்ள விமான நிலையத்தில் சுமார் 6 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை தொடர்ந்து செய்ய, அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகும் நீட்டிக்க வேண்டும் என அமெரிக்காவின் நட்பு நாடுகள் அதனை வலியுறுத்தின.

ஆனால் தலீபான்கள் ஏற்கனவே அறிவித்தபடி ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் அமெரிக்க படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இதற்கான காலக்கெடுவை நீட்டித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரித்தனர்.

இந்த நிலையில் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதோடு, காபூலில் உள்ள அமெரிக்க குடிமக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்றும் பணிகளும் நிறைவு செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நாம் எவ்வளவு வேகமாக முடிக்கிறோமோ அவ்வளவு நல்லது. நாம் தற்போது ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் முடிக்கும் வேகத்தில் இருக்கும்.

ஆனால் ஆகஸ்டு 31-க்குள் நிறைவு செய்வது தலீபான்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதைத் பொறுத்தது. காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை நீண்ட காலத்துக்கு நீடித்தால் அது உடைந்து விடும் அபாயம் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக விமானம் மூலம் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை விரைவில் முடிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நீண்ட காலம் இருப்பதால் தாக்குதல் நடத்தும் அபாயம் தீவிரமாக இருக்கிறது.

இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com