இங்கிலாந்தில் கலவரம் மூளும் அபாயம்: அரச குடும்பத்தை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்ற முடிவா? ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் பரபரப்பு

‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் கலவரம் மூளும் அபாயம் இருப்பதால் ராணி உள்பட அரச குடும்பத்தினர் அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்ற ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் கலவரம் மூளும் அபாயம்: அரச குடும்பத்தை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்ற முடிவா? ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் பரபரப்பு
Published on

லண்டன்,

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேறும் நடவடிக்கை பிரெக்ஸிட் என அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக 2016-ல் நடந்த பொதுவாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்கள் இதற்கு ஆதரவு அளித்தனர். முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே தீவிரப்படுத்தினார்.

இதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார். ஆனால் இந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில், இந்த ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய கூட்டமைப்பிடம் இருந்து ஒப்புதலை பெற்றார்.

ஆனால் இந்த ஒப்பந்தம் மீது நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தியபோது, பிரதமர் தெரசா மே வரலாறு காணாத தோல்வியை சந்தித்தார். இதனால் அவரது ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ஒப்பந்தம் ஏதும் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான தீர்மானத்தை பிரதமர் தெரசா மே நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். ஆனால் அதையும் எம்.பி.க்கள் நிராகரித்தனர்.

மேலும், பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தெரசா மே மறுபேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால் பிரெக்ஸிட் விவகாரத்தில் மறுபேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என ஐரோப்பிய கூட்டமைப்பு திட்டவட்டமாக கூறிவிட்டது.

பிரெக்ஸிட் விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐரோப்பிய கூட்டமைப்பும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது தெரசா மேக்கு தலைவலியாக அமைந்துள்ளது. பிரெக்ஸிட் நடவடிக்கையின் காலக்கெடு மார்ச் 29-ந் தேதி முடிவடைவதால், ஐரோப்பிய கூட்டமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த கால தாமதம் ஆகலாம் என கருதப்படுகிறது.

எனவே ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் சூழல் உருவாகி உள்ளது. அப்படி நடந்தால் அது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட் சாத்தியமானால் அந்நாட்டில் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என அஞ்சப்படுகிறது. மக்கள் போராட்டங்களின் போது வன்முறை வெடித்து, கலவரங்கள் மூளும் வாய்ப்புகள் உள்ளன.

பிரெக்ஸிட் விவகாரத்தில் கலவரங்கள் மூளும் அபாயம் இருப்பதால் ராணி எலிசபெத் உள்பட அரச குடும்பத்தினர் அனைவரையும் லண்டனுக்கு வெளியே பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஆலோசனைகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனிப்போர் காலத்தில் இருந்து இதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த சமயங்களில் அரச குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்படுவது வழக்கமாக உள்ளது.

இது குறித்து அரச குடும்பத்தின் பாதுகாப்பு பொறுப்பாளராக பணியாற்றிய முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், லண்டனில் அமைதியற்ற சூழல் நிலவுவது உறுதி செய்யப்பட்டால் அரச குடும்பத்தினர் நிச்சயமாக பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்படுவர் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com