உளவு பலூன் விவகாரம்; அமெரிக்க வான்வெளி பகுதியில் பறந்தது ஆராய்ச்சி விமானம்: சீனா விளக்கம்

அமெரிக்க வான்வெளியில் பறந்தது உளவு பலூன் அல்ல என்றும் அது வானிலை ஆராய்ச்சிக்காக சென்ற விமானம் என சீனா விளக்கம் அளித்து உள்ளது.
உளவு பலூன் விவகாரம்; அமெரிக்க வான்வெளி பகுதியில் பறந்தது ஆராய்ச்சி விமானம்: சீனா விளக்கம்
Published on

பீஜிங்,

அமெரிக்காவில் மொன்டானா பகுதியில், ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் மற்றும் கண்காணிப்பில் இருக்கும் அணுசக்தி ஏவுதளத்தின் வான்பரப்பில் பலூன் ஒன்று பறந்து சென்றது.

அது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என தெரிய வந்தது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சியை அமெரிக்க ராணுவம் கைவிட்டது.

அதன் இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது. இதனை தொடர்ந்து, கனடா நாட்டு தேசிய பாதுகாப்பு துறையும், அமெரிக்காவுடன் இணைந்து, சந்தேகத்திற்குரிய சீனாவின் உளவு பலூனின் இயக்கம் பற்றி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

கனடா நாட்டு மக்கள் பாதுகாப்புடன் உள்ளனர். கனடாவின் வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்றும் அந்நாடு தெரிவித்து உள்ளது.

இதன் எதிரொலியாக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் இந்த வார இறுதியில் மேற்கொள்ள இருந்த சீன பயணம் தள்ளி போடப்பட்டு உள்ளது. அமெரிக்க வான்வெளியில், சீனாவின் உளவு பலூன் பறந்திருப்பது, அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்ட விதிமீறல் என தெளிவாக தெரிகிறது என பிளிங்கன் கூறியுள்ளார்.

இந்நிலையில், சீன வெளியுறவு விவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள விளக்கத்தில், அது குடிமக்கள் பயன்பாட்டிற்காக சீனாவில் இருந்து வந்த ஆகாய கப்பல் வகையை சேர்ந்த விமானம். ஆராய்ச்சி பணியில், குறிப்பிடும்படியாக வானிலை ஆய்வு தொடர்புடைய பணியில் ஈடுபட கூடிய நோக்கத்திற்கானது.

மேற்கத்திய காற்று பாதிப்பால் மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையாலும், திட்டமிட்ட இலக்கை விட்டு அது திசைமாறி தொலைவுக்கு சென்று விட்டது என தெரிவித்து உள்ளது.

அமெரிக்க வான்பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக எங்களது தரப்பில் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, எதிர்பாராது நடந்த இந்த சூழலை பற்றி விளக்குவோம் என்றும் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com