

ஹனோய்,
ஒரு சாதாரண நம்பிக்கை மனிதனை எந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்பதற்கு உதாரணமாக, வியட்நாமைச் சேர்ந்த 83 வயது பாட்டி ஒருவர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுடியை வெட்டாமல் வளர்த்து வரும் விசித்திர சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
வியட்நாமின் பென் ட்ரே மாகாணத்தைச் சேர்ந்தவர் குயென். இவருக்கு 18 வயதாக இருந்தபோது திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் பெற்றும் தலைவலி குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தனது தலைமுடியை வளர்க்க தொடங்கியவுடன், ஆச்சரியப்படும் விதமாக தலைவலி படிப்படியாக குறைந்துள்ளது. இதனால், தனக்கு ஏற்பட்ட தலைவலிக்கு முடி வெட்டியதுதான் காரணம் என்றும், முடியை வளர்த்தால் மட்டுமே தலைவலி வராது என்றும் அவர் ஆழமாக நம்பத் தொடங்கினார்.
அன்று முதல் இன்று வரை, அதாவது கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட முடியை வெட்டவில்லை. அதுமட்டுமின்றி, தலைக்கு தண்ணீர் ஊற்றி குளித்தாலும் தலைவலி வருவதாக கூறி, முடியை கழுவுவதையும் பல தசாப்தங்களாக நிறுத்திவிட்டார்.
இதன் காரணமாக, அவரது தலைமுடி சீவப்படாமல், ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து சுமார் 20 அடி நீளத்திற்கு ஒரு பெரிய விசித்திரப் பாம்பு போன்ற ஜடாமுடியாக மாறியுள்ளது.
இந்த பாட்டிக்கு, இவ்வளவு நீளமான முடியை சுமப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனால், தனது அன்றாட பணிகளுக்கு மற்றவர்களின் உதவியை நாடி வரும் இவர், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் அங்குள்ள ஒரு புத்தர் கோவிலில் தங்கி எளிய ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
"மீண்டும் நான் முடி வெட்டினால் எனக்கு் கடுமையான தலைவலி வந்துவிடும், அதனால் சாகும் வரை என் முடியை வெட்ட மாட்டேன்" எனப் பாட்டி குயென் இப்போதும் பிடிவாதமாக கூறி வருகிறார்.