அண்டார்டிகாவில் 4 மாத குளிர் காலம் முடிந்து உதித்த சூரியன்; வெளியான அரிய புகைப்படம்

அண்டார்டிகாவில் 4 மாதங்களாக சூழ்ந்திருந்த இருள் விலகி சூரியன் உதித்த அரிய புகைப்படம் வெளிவந்துள்ளது.
image courtesy:  ESA
image courtesy:  ESA
Published on

பாரீஸ்,

அண்டார்டிகாவில் இந்த ஆண்டின் மே மாதத்தில் நீண்ட இரவு தொடங்கியது. இதனால், சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது. 4 மாதத்திற்கு பின்னர் இருள் மறைந்து, சூரியன் உதிக்க தொடங்கி இருக்கிறது. இதனை ஐரோப்பிய விண்வெளி கழகம் அறிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, அண்டார்டிகாவில் கன்கார்டியா ஆய்வு நிலையத்தில், ஆராய்ச்சி பணியில் ஈடுபட்ட 12 நபர்கள் கொண்ட குழுவானது, சூரிய வெளிச்சத்தில் கண் விழித்துள்ளனர்.

குளிர்காலத்திலும் ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது. எனினும், சூரியன் உதித்த நிலையில், புதிய ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவானது, இனி ஆய்வு பணியை தொடரும். மருத்துவர் ஹேன்னஸ் ஹேக்சன் படம் பிடித்த, சூரியன் உதித்த புகைப்படம் ஒன்றை ஐரோப்பிய விண்வெளி கழகம் வெளியிட்டு உள்ளது.

பகல் வெளிச்சம் பரவியது, எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என அந்த குழுவில் உள்ளவர்கள் தெரிவித்து உள்ளனர். நேரம், சில சமயங்களில் உண்மையில் விரைவாக கடந்து சென்று விடுகிறது. அதே சமயத்தில் மிக மெல்லவும் நேரம் செல்கிறது என அவர்கள் கூறியுள்ளனர்.

இருள் சூழ்ந்த வானத்தின் கீழ் ஆய்வு பணியில் ஈடுபட்ட குழுவானது, உயிரிமருத்துவ ஆராய்ச்சியையும் நடத்தி வருகிறது. இதன்படி, அந்த குழுவில் உள்ளவர்களின் சிறுநீர், கழிவுகள் மற்றும் ரத்த மாதிரிகளின் தரவுகளை சேகரித்து வருகிறார்கள். தனிமையாக இருக்கும்போது, அதிதீவிர சுற்றுச்சூழலில் மனிதர்களின் உடல் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி அறிவதற்காக உளவியல் சார்ந்த நடவடிக்கைகளையும் குழுவினர் மேற்கொள்கின்றனர்.

இந்த ஆய்வானது, நீண்டகாலம் பயணம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களுக்கு ஒரு புதிய வழி கிடைத்திடவும், அதுபற்றிய புதிய பார்வைகளை அறிந்து கொள்ளவும் உதவும்.

நாசா அமைப்பு நிலவுக்கு செல்வதற்கான திட்ட பணிகளை தொடங்கியுள்ளது. வருங்காலத்தில் செவ்வாய் கோளுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளது. அதனால், இந்த ஆய்வு பணிகள் விண்வெளி பயணங்களுக்கு உதவும். கடல் மட்டத்தில் இருந்து, 3,233 மீட்டர் உயரத்தில் கன்கார்டியா ஆய்வு மையம் உள்ளது.

உலகில் 4 பருவ காலங்கள் ஏற்படும் சூழலில், அண்டார்டிகாவிலோ கோடை மற்றும் குளிர் என இரு பருவ காலங்களே காணப்படுகின்றன. 6 மாதங்கள் வரை கோடையில் பகல் வெளிச்சத்துடனும் மற்றொரு 6 மாதங்களுக்கு குளிர்காலத்தில் இருள் போர்த்தியும் அண்டார்டிகா காணப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com