ஆப்கானிஸ்தானில் சிறைகளில் இருந்து 1,000 கைதிகளை விடுவித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் கைப்பற்றிய நகர சிறைகளில் இருந்து போதை பொருள் கடத்தல்காரர்கள் உள்பட 1,000 கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சிறைகளில் இருந்து 1,000 கைதிகளை விடுவித்த தலிபான்கள்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத சூழலில், அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் முடிவில் அதிபர் ஜோ பைடன் உள்ளார்.

அதன்படி தற்போது 90 சதவீத அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டன. எஞ்சிய படைகளும் இந்த மாத இறுதிக்குள் திரும்ப பெறப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுபற்றி பைடன் பேசும்போது, ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்ப பெறும் முடிவு குறித்து வருந்தவில்லை. கடந்த 20 ஆண்டுளில் 1 ட்ரில்லியன் டாலர்களை செலவழித்துள்ளோம். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்துள்ளோம். அதே சமயம் விமானம், உணவு, உபகரணங்கள், ஆப்கான் படைக்கு ஊதியம் ஆகியவற்றை அமெரிக்க தொடர்ந்து வழங்கும் என கூறினார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் அமெரிக்க படைகளின் வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் கைப்பற்றி விட்டனர்.

சமீப நாட்களில் அவர்கள் கைப்பற்றி உள்ள 6 முக்கிய நகரங்களில் இருக்கும் சிறை கைதிகளை தலிபான்கள் விடுவித்து உள்ளனர். அவர்களில், போதை பொருள் கடத்தல்காரர்கள், பிற வழக்குகளில் சிக்கிய கைதிகள் உள்பட 1,000 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் பலர் போதை பொருள் கும்பலை சேர்ந்தோர், கடத்தல்காரர்கள் மற்றும் ஆயுத கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஆவர். இவர்களில் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள 630 கைதிகள், நிம்ரோஜ் மாகாணத்தில் உள்ள 350 கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தலிபான்கள் விடுவித்து உள்ளனர்.

எனினும், பயங்கரவாதிகளை பிடித்த பின்பு, சிறை கைதிகள் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் என்று அரசு தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com