தமிழ் மக்களின் மிக முக்கியமான கலாசாரம் தைப் பொங்கல் விழா: அனுர குமார திசநாயகே

நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அனுர குமார திசநாயகே கூறினார்.
யாழ்ப்பாணம்,
பொங்கல் பண்டிகையையொட்டி இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே தமிழர்களின் கலாசார தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அங்கு தமிழர்கள் மத்தியில் அவர் பேசுகையில்,
தமிழ் மக்களின் மிக முக்கியமான கலாசார தினமான தைப் பொங்கல் விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம்.
இங்கே இருக்கும் பலரும் கடந்த தேர்தலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தது எனக்கு தெரியும். முதல் முறையாக நாங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றி பெற்றோம். அதன் பொருள், நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதாகும்.
நீங்கள் வைத்திருக்கும் இந்த நம்பிக்கைக்கு சிறிதும் துரோகம் செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இனவெறி இல்லாத, தேசிய ஒற்றுமை வாய்ந்த ஒரு நாட்டை (இலங்கை) உருவாக்குவோம். அத்துடன் உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்துவோம். ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழும் ஒரு நாட்டை உருவாக்குவோம். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற அயராது உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.






