

வாஷிங்டன்,
டிரம்ப் தனது ட்ரூத் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
நேற்று ஹோர்முஸ் ஜலசந்தியில் துப்பாக்கி சூடு நடத்த ஈரான் முடிவு செய்தது. இது எங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முழுமையான மீறலாகும். ஒரு பிரெஞ்சு கப்பலையும், ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஒரு சரக்கு கப்பலையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன.
அது சற்றும் நாகரிகமான செயல் அல்ல, இல்லையா? எனது பிரதிநிதிகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு செல்கிறார்கள் பேச்சுவார்த்தைகளுக்காக அவர்கள் நாளை மாலை அங்கு சென்றடைவார்கள். ஹோர்முஸ் ஜலசந்தியை தாங்கள் மூடப்போவதாக ஈரான் சமீபத்தில் அறிவித்தது.
இது மிகவும் விசித்திரமானது, ஏனெனில் எங்கள் முற்றுகை நடவடிக்கையாலேயே அந்த ஜலசந்தி ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும், அந்த நீர்வழிப்பாதை மூடப்படுவதால் தினமும் 50 கோடி டாலர் (500 மில்லியன் டாலர்) இழப்பை சந்தித்து, இறுதியில் நஷ்டமடைபவர்கள் அவர்களே ஆவர்.
இதனால் அமெரிக்காவிற்கு எந்த இழப்பும் இல்லை. சொல்லப்போனால், எப்போதும் தங்களை ஒரு கடுமையான சக்தியாக காட்டிக்கொள்ள விரும்பும் ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படை அருட்கொடையால், தற்போது பல கப்பல்கள் சரக்குகளை ஏற்றிக்கொள்வதற்காக அமெரிக்காவின் டெக்சாஸ், லூசியானா மற்றும் அலாஸ்கா ஆகிய இடங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
நாங்கள் மிகவும் நியாயமான மற்றும் ஏற்புடைய ஒரு ஒப்பந்தத்தை முன்வைக்கிறோம். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், அவர்கள் அதை ஏற்காவிட்டால், ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் அமெரிக்கா தகர்த்து அழிக்கும்.
இனிமேல் நல்லவர் வேஷம் ஏதும் கிடையாது. அவர்கள் மிக விரைவாகவும், மிக எளிதாகவும் வீழ்ச்சியடைவார்கள். அவர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், ஈரானுக்கு எதிராக செய்யப்பட வேண்டியதை செய்வது எனக்கு பெருமையாக இருக்கும்.
கடந்த 47 ஆண்டுகளாக பதவி வகித்த மற்ற அதிபர்கள் ஈரானுக்கு எதிராக செய்திருக்க வேண்டிய காரியத்தையே நான் இப்போது செய்யவிருக்கிறேன். ஈரானின் கொலை இயந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.