4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன் உயிரிழந்த சோகம்... அரசர் இரங்கல்

மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன் மீட்பு பணியின் முடிவில் உயிரிழந்தது சோகம் ஏற்படுத்தி உள்ளது.
4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன் உயிரிழந்த சோகம்... அரசர் இரங்கல்
Published on

செப்சாவோயென்,

மொராக்கோ நாட்டில் வசித்து வருபவர்கள் காலித் ஓரம் மற்றும் வாசிமா கெர்ஷீஷ். இந்த தம்பதியின் மகன் ரேயன் ஓரம் (வயது 5). கடந்த செவ்வாய் கிழமை விளையாடி கொண்டிருந்த சிறுவன் அருகேயிருந்த கிணறு ஒன்றில் தவறி விழுந்துள்ளான்.

இதன்பின் அவனது அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மீட்பு பணியை தொடங்கினர்.

கிணற்றின் வாய் பகுதி ஒன்றரை அடி விட்டமே கொண்டிருந்தது, மீட்பு பணியில் தொய்வை ஏற்படுத்தியது. அதிகாரிகள் இயந்திரங்களை கொண்டு மீட்பு பணியை தொடர்ந்தனர். சிறுவனுக்கு கயிறு வழியே உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.

கடந்த 4 நாட்களாக நடந்த மீட்பு பணியின் முடிவில் சிறுவனை வெளியே கொண்டு வந்தனர். எனினும், இந்த முயற்சியின் பலன் நீடிக்கவில்லை. சிறுவன் உயிரிழந்து விட்டான். இந்த சம்பவத்தில் சிறுவனின் குடும்பத்திற்கு அந்நாட்டின் அரசர் 6ம் முகமது, தொலைபேசி வழியே இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com