துருக்கிக்கு வந்த சோதனை; நிலநடுக்கம் பாதித்த நகரில் மீண்டும் நிலநடுக்கம்: மீட்பு குழு அதிர்ச்சி

துருக்கியில் நிலநடுக்கம் கடுமையாக பாதித்த நகரம் அருகே நேற்று நள்ளிரவில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
துருக்கிக்கு வந்த சோதனை; நிலநடுக்கம் பாதித்த நகரில் மீண்டும் நிலநடுக்கம்: மீட்பு குழு அதிர்ச்சி
Published on

அங்காரா,

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதியில் கடந்த வாரம் திங்கட்கிழமை அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.

ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் 100-க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

துருக்கி நாட்டின் தென்கிழக்கே 10 மாகாணங்களில், நிலநடுக்கம் எதிரொலியாக, 3 மாத கால அவசரகால நிலையை பிரதமர் எர்டோகன் பிறப்பித்து உள்ளார்.

துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடுத்த 3 நாட்களுக்கு இந்த கைது நடவடிக்கை தொடரும் என கூறப்படுகிறது.

ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் மேற்கொள்ளும் பணி முடங்கும் வகையில், ஹதே பகுதியில் வெவ்வேறு குழுக்களிடையே மோதல்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால், பாதுகாப்பு குறைவை முன்னிட்டு மீட்பு நடவடிக்கைகளை ஆஸ்திரிய ராணுவம் சஸ்பெண்டு செய்துள்ளது என்றும் அந்நாட்டு பேரிடர் மற்றும் நிவாரண படை பிரிவு தெரிவித்து இருந்தது.

துருக்கியில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் விரைவாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில் இதுபோன்ற நிகழ்வுகளும் மக்களுக்கு துயரை அதிகப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில், துருக்கியின் காஹ்ராமன்மராஸ் நகரில் இருந்து தென்கிழக்கே 24 கி.மீ. தொலைவில் நேற்று நள்ளிரவு 12.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 15.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்நகரம் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்க பகுதியாக உள்ளது. ஒரு வாரம் கழிந்த நிலையில், மீண்டும் அதே நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

துருக்கியில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களின் பாதிப்பு அதிக வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 1939-ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட கொடிய நிலநடுக்கம் இது என கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டு, நிலநடுக்க பாதிப்பு பகுதிகளில் ஸ்திரத்தன்மையை கொண்டு வர அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com