

லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் தேசிய ராணுவ அருங்காட்சியகத்தில் அந்நாட்டு ஆயுத படைகளுக்கான தலைமை தளபதி ஜெனரல் சர் நிக் கார்ட்டர் அளித்துள்ள பேட்டியில், வருகிற 2030ம் ஆண்டில் பிரிட்டன் ராணுவத்தில் 90 ஆயிரம் ராணுவ வீரர்கள் மற்றும் 30 ஆயிரம் ரோபோக்கள் என மொத்தம் 1.2 லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறினார்.
அந்நாட்டின் லிவர்பூல் நகரில் கொரோனா பரிசோதனை நிகழ்ச்சியில் 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். முழு அளவில் கொரோனா பரிசோதனை நிகழ்ச்சியில் வீரர்களை பயன்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டனர் என கூறப்படுகிறது.
அரசியல் முடிவுகளை பற்றி இங்கிலாந்து நாட்டில் ஒரு மூத்த ராணுவ அதிகாரி பேசுவது வழக்கமல்ல.
எனினும் கார்ட்டர் கூறும்பொழுது, ராணுவ நவீனமயமாக்கல் தேவைகளுக்காக நீண்ட கால முதலீடுகளை ராணுவம் மேற்கொள்வதற்காக பல்லாண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அனுமதியை இந்த ஆண்டு அரசு வழங்கினால் நன்றாக இருக்கும். ஓராண்டு பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் ஒரு புறம் நடந்து வருகிறது என்றாலும், வேறு வகையிலான பட்ஜெட் பணிகளுக்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன என அவர் கூறினார்.
இங்கிலாந்து நாடு, கொரோனா தொற்றால் நெருக்கடியை சந்தித்துள்ள சூழல் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார தேக்க நிலை ஆகியவற்றை நினைவு கூர்வது முக்கியத்துவம் வாய்ந்தது என கூறிய கார்ட்டர், நாட்டின் சேவை பணியில் உயிரிழந்தவர்களை கவுரவிக்க வேண்டும். அவற்றை மறப்பது ஆபத்து தரும் என கூறினார்.
ஏனெனில் அது உண்மையில் கொடூர போர் ஆகும். நீங்கள் கொடூர போர் என்பதனை மறந்து விட்டால், மக்கள் போர் புரிவது கூட சரியானது என்ற நிலைக்கு வந்து விடுவார்கள் என நான் நினைக்கிறேன். நாம் நிச்சயமற்ற மற்றும் மனகலக்கம் நிறைந்த இந்த உலகத்தில் வாழுகிறோம். இதனால் புதிய உலக போர் கூட ஏற்பட கூடும் என்றும் அவர் கூறினார்.