உக்ரைன்-டெல்லி விமானம் 241 பயணிகளுடன் புறப்பட்டது

உக்ரைனில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் 241 பயணிகளுடன் புறப்பட்டு உள்ளது.
உக்ரைன்-டெல்லி விமானம் 241 பயணிகளுடன் புறப்பட்டது
Published on

கீவ்,

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன. உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, உக்ரைனில் தாக்குதல் நடத்த ஏதுவாக ரஷிய போர் படைகள் பெருமளவில் உக்ரைன் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரத்திலும் மோதல் ஏற்பட கூடும் என்ற அச்சத்தினால் பல்வேறு நாடுகளும் தூதர்களை திரும்ப பெற்றுள்ளன. இந்தியா உள்பட பல நாடுகள் தங்களுடைய குடிமகன்களை நாடு திரும்ப கேட்டு கொண்டுள்ளது.

இதற்கேற்ப இந்திய அரசு, உக்ரைனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள், குடிமகன்கள் உள்பட பலரை ஏற்றி கொண்டு நாடு திரும்புகிறது. இதன்படி, 241 பயணிகளுடன் ஏர் இந்தியா சிறப்பு விமானம் உக்ரைனில் இருந்து டெல்லிக்கு இன்று புறப்பட்டு உள்ளது.

அந்த விமானம் 10.15 மணிக்கு இந்தியா வரவேண்டும். ஆனால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒன்றரை மணிநேரம் காலதாமதத்துடன் இரவு 11.30 மணிக்கு விமானம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com