

சியோல்,
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கடும் கண்டனம் தெரிவித்தார்.
தனது அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா ஆயுதங்களை குவித்தும், போர் ஒத்திகையில் ஈடுபட்டும் வருகிறது. இதனால் தென்கொரியாவின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவிக் கரம் நீட்டி உள்ளது.
கடந்த வாரம் இரு நாடுகளும் தென்கொரிய கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியை தொடங்கின. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்தது. எனினும் அமெரிக்க, தென்கொரிய ராணுவத்தினர் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன அணுசக்தி ஏவுகணைகளை செலுத்தியும், சக்தி வாய்ந்த அணுகுண்டு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்தும் வடகொரியா சோதனை நடத்தி வருகிறது. இதனால் ஐ.நா. பல்வேறு தடைகளை வடகொரியா மீது விதித்து உள்ளது.
ஆனால் இதை பொருட்படுத்தாமல் வடகொரியா தனது ஆயுத திறனை வெளிப்படுத்தும் விதமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன அணுசக்தி ஏவுகணைகளை செலுத்தி சோதனை செய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை சீனாவின் வடக்கு எல்லையை ஒட்டி அமைந்துள்ள டோங்க்சாங்ரி என்னும் பிராந்தியத்தில் இருந்து அடுத்தடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் 4 நவீன ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியை நோக்கி வடகொரியா ஏவியது.
அந்த ஏவுகணைகள் ஜப்பானின் வடமேற்கு கடலோர பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் கடல் பகுதி அருகே 300 கி.மீட்டர் தொலைவில் கடலுக்குள் விழுந்தன. இந்த ஏவுகணைகள் ஆயிரம் கி.மீட்டர் தூரத்திற்கு 260 கி.மீட்டர் உயரத்தில் பறந்தன.
இதனால் பெரிய அளவில் ஜப்பானுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் கூட தனது எல்லைக்குள் அத்துமீறி ஏவுகணைகளை செலுத்திய வடகொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கடும் எச்சரிக்கை விடுத்தார். டோக்கியோ நகரில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், வடகொரியாவின் செயல் ஜப்பானை அச்சுறுத்துவதாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.
அதே நேரம், தென்கொரியாவின் பொறுப்பு ஜனாதிபதி ஹவாங் கியோஆன் உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டத்தை சியோல் நகரில் கூட்டி வடகொரியாவின் அச்சுறுத்தல் குறித்து விவாதித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தென்கொரியாஅமெரிக்க ராணுவத்தின் கூட்டு போர் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா இந்த ஏவுகணைகளை செலுத்தி இருக்கிறது. எனவே ஏவுகணை தாக்குதலை முறியடிக்க அமெரிக்காவின் அதிகபட்ச வான்பாதுகாப்பு முனையத் திட்டத்தை (தாட்) உடனடியாக தென்கொரிய எல்லைப் பகுதிக்கு வரவழைத்து நிறுத்துவோம் என்று குறிப்பிட்டார்.
வடகொரியாவின் நேற்றைய ஏவுகணைகள் சோதனையை அமெரிக்காவும் கடுமையாக கண்டித்தது.
இதுபற்றி அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் மார்டின் ஓ டோனல் கூறும்போது, இந்த ஏவுகணைகள் வடஅமெரிக்கா வரை பாயும் அளவிற்கு திறன் கொண்டவை அல்ல. இதனால் அமெரிக்காவுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. என்றபோதிலும் இவற்றை உன்னிப்பாக ஆய்வு செய்தோம். தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் பாதுகாப்பை பராமரிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.
அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறும்போது, தொடர்ந்து எங்களுக்கும் எங்களது நட்பு நாடுகளுக்கும் விடுக்கப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்கும் திறன் எங்களிடம் உள்ளது. அதைப் பயன்படுத்தி தக்க பதிலடி கொடுக்க நாங்கள் முற்றிலும் தயார் நிலையில் இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனை மிரட்டல்களால் தென்கொரியஜப்பான் கடல் பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.