

வாஷிங்டன்,
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த தாக்குதலில் முக்கிய அரசியல் தலைவர்கள், இரு தரப்பு வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதேவேளை, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியது. இதனால் ஈரானுக்கு சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டது.
பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சியால் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்கா, ஈரான் அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, ஈரான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை சுங்கக்கட்டணம் இன்றி திறக்கப்படும் என்று ஈரானும், ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக திரும்பபெறப்படும் என்றும் அமெரிக்காவவும் அறிவித்துள்ளன. அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதால், ஹார்முஸ் நீரிணை கட்டணமின்றி திறக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”ஈரானுடனான ஒப்பந்தம் இப்போது நிறைவடைந்துவிட்டது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ஹார்முஸ் நீரிணையை கட்டணமின்றி திறக்க நான் இதன்மூலம் முழுமையாக அங்கீகரிக்கிறேன். அதே நேரத்தில், அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்கவும் அங்கீகரிக்கிறேன். உலகக் கப்பல்களே, ஹார்முஸ் நீரிணையை கடக்க தயாராகுங்கள். எண்ணெய் தடையின்றி பாயட்டும்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி அரசுத் தொலைக்காட்சியில் பேசியபோது உறுதிப்படுத்தினார். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் போருக்கு "உடனடி முற்றுப்புள்ளி" வைத்ததாகவும், "இறுதி உடன்படிக்கையை" எட்டுவதற்காக இரண்டு மாதங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினார்.
30 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறக்க நடவடிக்கை, ஈரான் எண்ணெய், பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் உள்ளிட்ட 14 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தம் அமெரிக்கா - ஈரான் இடையே கையெழுத்தாக உள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை (19ம் தேதி) சுவிட்சர்லாந்தில் வைத்து அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிய பிறகு் ஹார்முஸ் நீரிணை பயன்பாட்டுக்கு வரும் வரவுள்ளது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களில் ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் அனைத்தும் இரு தரப்பும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி ஒப்பந்தத்தின் கீழ், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களில் முதற்கட்டமாக 12 பில்லியன் டாலரை அமெரிக்கா விடுவிக்க உள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.60 நாள் பேச்சுவார்த்தை காலத்திற்குள் மொத்தம் 24 பில்லியன் டாலர் சொத்துக்களை விடுவிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையே இறுதியாகியுள்ள அமைதி ஒப்பந்தத்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென சரிந்து வருகிறது. அதிகாலை வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.03% சரிந்து ஒரு பேரல் 83.81 டாலராகவும், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 4.70% சரிந்து 80.89 டாலராகவும் குறைந்துள்ளன.
அமைதி ஒப்பந்தம் காரணமாக ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட உள்ளதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்களுடன் ஹார்முஸ் நீரிணை பகுதியில் காத்திருக்கும் பல கப்பல்கள் விரைவில் நீரிணையை கடக்க உள்ளன. இதன் மூலம் உலக நாடுகளுக்கு விரைவில் எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.