பாகிஸ்தானில் பயங்கரம்: துப்பாக்கிமுனையில் பெண் கடத்தப்பட்டு, 3 பேரால் கற்பழிப்பு- 2 பேர் கைது

பாகிஸ்தானில் துப்பாக்கிமுனையில் பெண் கடத்தப்பட்டு 3 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர்.
பாகிஸ்தானில் பயங்கரம்: துப்பாக்கிமுனையில் பெண் கடத்தப்பட்டு, 3 பேரால் கற்பழிப்பு- 2 பேர் கைது
Published on

கராச்சி,

பாகிஸ்தானில் கராச்சி நகரில் குல்ஷா இ ஹதீத் பகுதியில் ஒரு பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவுக்கு வெளியே 21 வயதான ஒரு பெண் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு தனது குடும்பத்துடன் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அவர்கள் முன் ஒரு கார் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய 3 நபர்கள், அந்தப் பெண்ணை துப்பாக்கி முனையில் காரில் கடத்திச்சென்றனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் அந்தப் பெண்ணை கற்பழித்து விட்டு, அவரை அவரது வீட்டுக்கு அருகே போட்டு விட்டுச் சென்றனர்.

இந்த பயங்கர சம்பவம், கராச்சி நகரை உலுக்கி உள்ளது.

இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை, போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது பற்றி மூத்த போலீஸ் சூப்பிரண்டு அபித் உசேன் காயிம்கனி கூறும்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறி உள்ளார். அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவர் கற்பழிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்து உள்ளனர். 3-வது நபரை தேடி வருகின்றனர். சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்செயல்கள் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com