தோல்வி அடைந்தவர்களின் கட்சியாக மாறிவிட்டோம்.. விவேக் ராமசாமி பேச்சால் சர்ச்சை

உக்ரைன், சீனா விவகாரம் மற்றும் கட்சியின் எதிர்கால பாதை குறித்து ஐந்து பேரும் காரசாரமாக தங்கள் கருத்தை முன்வைத்தனர்.
தோல்வி அடைந்தவர்களின் கட்சியாக மாறிவிட்டோம்.. விவேக் ராமசாமி பேச்சால் சர்ச்சை
Published on

மியாமி:

அமெரிக்க அதிபர் தேர்தலில் கிராண்ட் ஓல்டு பார்ட்டி என அழைக்கப்படும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான மூன்றாவது விவாத நிகழ்ச்சி மியாமியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி, தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ், செனட்டர் டிம் ஸ்காட் மற்றும் நியூ ஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகிய 5 வேட்பாளர்கள் பங்கேற்று விவாதித்தனர்.

உக்ரைன், சீனா விவகாரம் மற்றும் கட்சியின் எதிர்கால பாதை குறித்து ஐந்து பேரும் காரசாரமாக தங்கள் கருத்தை முன்வைத்தனர். இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசினர். முக்கிய வேட்பாளரான டொனால்டு டிரம்ப் பங்கேற்கவில்லை.

விவாத மேடையில் விவேக் ராமசாமி பேசும்போது, சொந்த கட்சியான குடியரசு கட்சியை 'தோல்வி அடைந்தவர்களின் கட்சி' என்று குறிப்பிட்டார்.

சமீபத்திய ஆண்டுகளில் குடியரசு கட்சியின் செயல்திறன் குறித்து பேசிய அவர், சமீபத்திய தேர்தல் தோல்விகளுக்கு குடியரசுக் கட்சியின் தேசியக் குழு தலைவர் ரோனா மெக்டேனியல் மீது குற்றம் சாட்டினார். தோல்விக்கு அவர் பொறுப்பு ஏற்று பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை 'நாஜி' என்று குறிப்பிட்ட விவேக் ராமசாமி, அவரது செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

'உக்ரைன் நாடு ஜனநாயகத்தின் முன்னுதாரணம் அல்ல. 11 எதிர்க்கட்சிகளுக்கு தடை விதித்துள்ள நாடு அது. அனைத்து ஊடகங்களையும் அரசு தொலைக்காட்சி ஊடக பிரிவாக ஒருங்கிணைத்துள்ளனர். இது ஜனநாயகம் அல்ல. அமெரிக்கா அதிக நிதி கொடுக்காவிட்டால் இந்த ஆண்டு தேர்தலை நடத்த மாட்டோம் என்று மிரட்டியிருக்கிறது. அது ஜனநாயகம் அல்ல' என்றும் விவேக் தெரிவித்தார். அவரது இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com