அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கு முக கவசம் தேவையில்லை

அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கு முக கவசம் தேவையில்லை
Published on

வாஷிங்டன்,

உலக அளவில் அமெரிக்கா அதிக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை கொண்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் கொரோனா பாதிப்புகளை குறைக்க தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தினார்.

இதனால், அமெரிக்க மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர் இதுவரையில் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்து கொண்டுள்ளனர். அவர்களில் 30 சதவீதம் பேர் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர். இதனை அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் தொடர்ச்சியாக அந்த மையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இதன்படி, அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், சிறு குழுக்களுடனான வெளிப்புற கூட்டங்களில் கூடும்பொழுது முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த குழுக்களில் தடுப்பூசி போட்டவர்களோ அல்லது போடாதவர்களோ இருக்கிறார்கள் என்றாலும் கூட முக கவசம் அணிய தேவையில்லை.

பல்வேறு வீடுகளில் இருந்து வந்திருக்கும் நண்பர்களுடன், வெளிப்புற உணவு விடுதியில் ஒன்றாக உணவருந்தும்பொழுதும், முக கவசம் அணியாமல் இருப்பது முழு அளவில் தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதுகாப்புமிக்க ஒன்று என்றே எடுத்து கொள்ளலாம் என அந்த மையம் தெரிவித்து உள்ளது.

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடுகளால் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்ட அமெரிக்கர்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியும். முக கவசம் அணியாமல் அவர்கள் வெளியே செல்ல கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com