"அன்பெனும் ஆயுதம் தானே.." புற்றுநோயில் இருந்து மீண்ட 3 வயது சிறுவனுக்காக ஊரே ஒன்று திரண்ட ஆச்சரியம்

சிறுவனுக்காக இஸ்தான்புல்லில் ஒரேநேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இஸ்தான்புல்,
துருக்கியின் இஸ்தான்புல் நகரில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் குணமடைந்ததை கொண்டாடும் விதமாக, ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து வானில் வண்ண பலூன்களை பறக்கவிட்டனர்.
முன்னதாக இஸ்தான்புல்லை சேர்ந்த ஒருவர், தனது 3 வயது மகன் ரத்த புற்றுநோயில் இருந்து குணமடைந்ததை, வானில் வண்ண பலூன்களை பறக்கவிட்டு கொண்டாட இருப்பதாகவும், ஆனால் தங்களுக்கு யாரும் இல்லை என்றும், அதில் இணைய விரும்புபவர்கள் வரலாம் என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவுகள் துருக்கி முழுவதும் வைரலான நிலையில், அந்த சிறுவனுக்காக இஸ்தான்புல்லில் ஒரேநேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு, அந்த நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர்.
புற்றுநோய் பாதித்து குணமடைந்த சிறுவனின் தந்தையின் வார்த்தைக்காக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வானில் வண்ண பலூன்களை பறக்கவிட்ட நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. இந்நிகழ்வில் புற்றுநோய் பாதித்த பலரும் பங்கேற்றனர்.






