

சிங்கப்பூர்,
இந்திய கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் அலோக் ஆனந்தா தலைமையில் சென்றஇந்திய கடற்படை கப்பல்களான உதயகிரி, கவரத்தி, சக்தி கப்பல்களுக்கு, நேற்று முன்தினம் சிங்கப்பூர் கடற்படை அதிகாரிகள் உற்சாக மற்றும் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த அதிகாரப்பூர்வ வருகையானது, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நிலவி வரும் மிக வலுவான, நீண்டகால வரலாற்று சிறப்புமிக்க நட்புறவுக்கு சான்றாக அமைந்துள்ளது. இந்திய அரசின் ‘கிழக்கு நோக்கிய செயல்பாடு’ கொள்கையின் படியும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கான மகாசாகர் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையிலும் இந்த வரலாற்று பயணம் அமைந்துள்ளது.
மேலும், ‘ஆசியான் - இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டு 2026’-ன் உன்னத நோக்கங்களை உலக அரங்கில் முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சிங்கப்பூரில் தங்கியிருக்கும் நாட்களில், இரு நாட்டு கடற்படை வீரர்களும் பங்கேற்கும் பல்வேறு தொழில்முறை ஆலோசனைகள் மற்றும் கடல்சார் கூட்டு பயிற்சிகள் ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற உள்ளன. இதன்மூலம் இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பு புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.