ஏமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் - 3 பேர் பலி

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது
ஏமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் - 3 பேர் பலி
Published on

சனா,

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரின் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 4ம் தேதி ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, பென் குரின் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஏமனின் ஹூடைடா நகரில் உள்ள துறைமுகம் மீது நேற்று முன் தினம் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 38 பேர் படுகாயமடைந்தனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com