

வாஷிங்டன்,
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் 5-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டு ராணுவத்தின் சரமாரி தாக்குதலுக்கு அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் காமேனி, பாதுகாப்புத்துறை மந்திரி அஜீஸ் நசீர்சாதே, ஈரான் புரட்சிக்கர ராணுவப்படை தளபதிகள் முகமது பக்பூர், செய்யது மஜித் மவுசவி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி ஷம்கானி உள்ளிட்ட 13 உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கூண்டோடு படுகொலை செய்யப்பட்டனர்.
காமேனி வீட்டில் இவர்கள் அனைவரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது தக்க சமயம் பார்த்து அமெரிக்கா - இஸ்ரேல் வீசிய ஏவுகணை அந்த வீட்டை பயங்கரமாக தாக்கியது. இதனை தொடர்ந்து அந்த நாட்டின் தற்காலிக பாதுகாப்புத்துறை மந்திரியாக செய்யது மஜித் இப்னு அல்-ரெசா நேற்று முன்தினம் பதவியேற் றார். அவர் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள்ளேயே. நேற்று நள்ளிரவு தெஹ்ரானில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் செய்யது மஜித் இப்னு படுகொலை செய்யப்பட்டார். இந்த தகவலை இஸ்ரேலிய ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இருப்பினும் இதுகுறித்து ஈரான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு கருதி அங்கு இணையதளம் முடக்கப்பட்டதால் அங்கிருந்து முக்கிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதனிடையே ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் பயங்கர தாக்குதல் மேற்கொண்டது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் நாட்டின் முக் கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளை குறிவைத்து இந்த பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.
ஏவுகணைகளை வீசியும், குண்டுகளை வீசியும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தொழிற்சாலை கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதனால் வானில் கரும்புகை மேலேழும்பியது. முன்னதாக தொழிற்சாலைகள் அருகே வசித்து வந்த பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. மேலும் போர் தாக்குதல் நீடிக்கும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் ஈரான் மீது தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஈரானுடனான அணுசக்திதிட்டம் தொடர்பாக மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பிறகு, ஈரான் அதன் செறிவூட்டல் நடவடிக்கைகளை கைவிடுவது முடியாத காரியம் என்று கூறியதால், அமெரிக்கா இந்த முடிவை எடுத்ததாகவும், இறுதிக் கூட்டத்திற்குப் பிறகு சில நாட்களுக்குள் ஆபரேஷன் எபிக் ப்யூரியை தொடங்கியதாகவும் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.