அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட டிக்டாக் பிரபலம் காபி லேம்

விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக டிக்டாக் பிரபலம் காபி லேம் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றாக, அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார். அதேவேளை, சட்டவிரோத குடியேறியவர்களை களை கண்டறியும் பணியின்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், டிக்டாக் பிரபலம் காபி லேம், விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக லாஸ் வேகாஸில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டைச் சேர்ந்த இவர், கைதுக்குப் பின் அமெரிக்காவை விட்டு வெளியேற சம்மதித்ததால் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் இத்தாலி நாட்டில் குடியுரிமை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 வயதான காபி லேம் கொரோனா காலகட்டத்தின் போது உலகளவில் பிரபலமடைந்தவர். ஒரு வார்த்தை கூட பேசாமல் வீடியோ வெளியிட்டு வரும் இவருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு டிக்டக்கில் மட்டும் 162 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும், இன்ஸ்டாகிராமில் 80 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும் உள்ளனர்.