

ஈரான் - அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை முடங்கியுள்ள சூழலில், ஈரானுக்கு நேரம் குறைந்து கொண்டே செல்வதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேகமாக செயல்படாவிட்டால் ஈரானில் எதுவும் மிஞ்சியிருக்காது| என்றும் மிரட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணை இதுவரை இயல்பு நிலைக்குத் திரும்பாததால் உலக நாடுகள் தவித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த எச்சரிக்கை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. தற்போது அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள பரக்கா அணுமின் நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் அணுமின் நிலைய வளாகத்தில் தீப்பிடித்தது. அதை கடுமையாக போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. இது போன்ற செயல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரக்கூடிய நிலையில், டிரம்பும் ஈரானை ஒப்பந்தத்தை ஏற்குமாறு நெருக்கடி கொடுத்து வருகிறார்.