கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடிப்பு; பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்ததில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடிப்பு; பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு
Published on

கவுதமாலா சிட்டி,

கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது. அதில் இருந்து பல கி.மீட்டர் தொலைவிற்கு செந்நிறத்தில், 700 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் மிகுந்த லாவா வெளியேறி வருகிறது.

இதனால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல், தலைநகர் மற்றும் பிற பகுதிகளுக்கு பரவியுள்ளன. அங்குள்ள வீடுகள், மரங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சாம்பலால் மூடப்பட்டு உள்ளன. பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு தப்பி சென்றுள்ளனர்.

இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இதுபற்றி அந்நாட்டின் தடயவியல் அறிவியல் அமைப்பின் தலைவர் பஃனுவேல் கார்சியா கூறும்பொழுது, எரிமலையால் சேதமடைந்துள்ள கிராமங்களில் இருந்து மீட்பு பணியாளர்கள் அதிக உடல்களை மீட்டுள்ளனர்.

இதுவரை 62 உடல்கள் கிடைத்துள்ளன. அவற்றை கொண்டு அடையாளம் காணும் பணியில் எங்கள் அமைப்பு ஈடுபட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

கரும்புகை மற்றும் சாம்பல் பரவிய நிலையில் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மீட்பு பணியாளர்கள் முக கவசம் அணிந்தபடி எச்சரிக்கையுடன் தங்களது பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

பியூகோ என்றால் ஆங்கிலத்தில் தீ என பொருள்படும். இந்த எரிமலையருகே சுற்றுலாவாசிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியான ஆன்டிகுவா நகரமும் அமைந்துள்ளது. இங்கு காபி தோட்டங்களும் அதிகம் காணப்படுகின்றன. காற்றில் ஏற்பட்ட மாற்றத்தினால் எரிமலை சாம்பல் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com