காபூல் விமான நிலைய இரட்டை குண்டு வெடிப்பு : பலி எண்ணிக்கை 103 ஆக உயர்வு

காபூல் நகரம் தலீபான்களின் வசமான பிறகு 10 நாள்களில் சுமார் ஒரு லட்சம் பேர் விமானங்கள் மூலமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காபூல் விமான நிலைய இரட்டை குண்டு வெடிப்பு : பலி எண்ணிக்கை 103 ஆக உயர்வு
Published on

காபூல்

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.

இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இதற்கிடையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர்.

நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கின்றனர்.

தலீபான்கள் காபூல் நகரத்தைக் கைப்பற்றிய பிறகு, விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 5,800 வீரர்களும், இங்கிலாந்தை சேர்ந்த ஆயிரம் வீரர்களும் விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காபூல் நகரம் தலீபான்களின் வசமான பிறகு 10 நாள்களில் சுமார் ஒரு லட்சம் பேர் விமானங்கள் மூலமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காபூல் விமான நிலையத்துக்கு வெளியே காத்திருக்கும் மக்களுக்கு அமெரிக்கா,இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று காபூல் விமான நிலையத்துக்கு வெளியே அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன.ஒன்று விமான நிலையத்தின் அபே வாயில் அருகிலும், மற்றொன்று அந்த வாயில் பக்கத்தில் அமைந்துள்ள பாரன் ஓட்டல் அருகேயும் நடந்தன.

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது வரை 103 பேர் உயிர் இழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் 90 பேர் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் ஆவார்கள்.

இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com