ஹார்மூஸ் ஜலசந்தியில் சுங்க கட்டணம் சட்டவிரோதம், ஏற்க முடியாதது: அமெரிக்கா

ஈரானை தவிர, உலகில் எந்த நாடும் சுங்க நடைமுறையை ஏற்று கொள்ளவில்லை.
ஹார்மூஸ் ஜலசந்தியில் சுங்க கட்டணம் சட்டவிரோதம், ஏற்க முடியாதது:  அமெரிக்கா
Published on

புதுடெல்லி

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் பாதுகாப்பு பேச்சுவார்த்தை தொடர்பான இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

குவாட் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் புதுடெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சுங்க கட்டணம் எதுவுமின்றி ஹார்மூஸ் ஜலசந்தியை திறந்து விட வேண்டும்.

ஈரானை தவிர, உலகில் எந்த நாடும் சுங்க நடைமுறையை ஏற்று கொள்ளவில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கும் விசயமோ, சட்டத்திற்கு புறம்பானது, சட்டவிரோதம், நீடிக்க முடியாத மற்றும் ஏற்று கொள்ள முடியாத விசயம் ஆகும் என்று கூறினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பிப்ரவரி 28-ந்தேதி ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் அந்நாட்டில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இதனால், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டன.

இந்த சூழலில், போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து, ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த இந்த தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

எனினும், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதி வழியே செல்லும் கப்பல்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக ஈரான் பரிசீலனை செய்து வருகிறது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தது. இதன்படி, இந்த பகுதியை சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு பயன்படுத்தி கொள்ளும் நாடுகள் அனைத்தும், எரிசக்தி, உணவு வினியோகத்திற்கான சரக்குகள் போன்றவற்றை கொண்டு செல்லும் கப்பல்களுக்கு ஈடாக, ஈரானுக்கு சுங்க கட்டணம் மற்றும் வரிகளை செலுத்த வேண்டியிருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது.

மேற்காசிய மோதலால் ஏற்கனவே, பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில், ஈரானின் சுங்க கட்டணம் விதிக்கும் முடிவு உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com