5 வாரங்களுக்கு பின் டோங்கோ தீவில் இணையதளம் சேவை தொடக்கம்

சுனாமி தாக்கி 5 வாரங்களுக்கு பின் டோங்கோ தீவில் மீண்டும் இணையதளம் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
5 வாரங்களுக்கு பின் டோங்கோ தீவில் இணையதளம் சேவை தொடக்கம்
Published on

நுலுலஃபா,

பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.

இதற்கிடையில், டோங்கோ தீவு நாட்டில் கடலுக்கு அடியில் உள்ள ஒரு எரிமலை பயங்கர சத்தத்துடன் கடந்த மாதம் 15-ம் தேதி வெடித்து சிதறியது. இதனால், சுனாமி அலை டோங்கோ தீவை தாக்கியது. இந்த சுனாமி தாக்குதலில் டோங்கோ தீவு நிலைகுலைந்தது. மேலும், 3 பேர் உயிரிழந்தனர்.

தீவை சுனாமி தாக்கியதால் உலகின் பிற பகுதியில் இருந்து டோங்கோ துண்டிக்கப்பட்டது. இணையதள சேவைகளும் தடைபட்டது. கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கப்பட்டு அதன் மூலம் இணையதள சேவைகள் டோங்கோ தீவுக்கு வழங்கப்பட்டு வந்தது.

சுனாமியின் போது கேபிள் வயர்கள் அடித்து செல்லப்பட்டதால் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீவுக்கு மீண்டும் இணையதள சேவையை கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் மூலமும் டோங்கோ தீவில் இணையதள சேவையை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகி 5 வாரங்களுக்கு பின்னர் டோங்கோ தீவில் இணையதள சேவை தற்போதும் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

சுனாமியால் கடலுக்கு அடையில் 90 கிலோமீட்டர் தூரத்திற்கு சேதமடைந்திருந்த பைபர் ஆப்டிகல் கேபிள் மீண்டும் சீரமைக்கப்பட்டு இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் டோங்கோ அரசு கேபிள் நிறுவனத்தில் தலைவர் சாமுவெல் ஃப்யூவ் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மூலம் டோங்கோ தீவுக்கு இணையதள சேவை வழங்கும் சோதனை வெற்றிபெற்றுவிட்டது. அதேபோல், கேபிள் மூலம் வழங்கப்படும் இணையதள சேவையும் சீரமைக்கப்பட்டுவிட்டது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மூலம் தீவில் இருந்து பிற பகுதிகளுக்கு இணையதள சேவை மூலம் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என சாமுவெல் தெரிவித்தார்.

5 வாரங்களுக்கு பின்னர் மீண்டும் இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளதால் டோங்கோ தீவில் வசித்து வரும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com