

நியூயார்க்
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறுகையில் வரிசையாக அங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஏற்படும் விநோதமான பிரச்சினைகளே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்கிறார்.
கியூபாவும் அமெரிக்காவும் சுமார் 50 ஆண்டுகள் கழித்து நட்பு நாடுகளாகி 2015 ஆம் ஆண்டில்தான் இரு நாடுகளிலும் தூதரகங்களை திறந்தன. என்றாலும் புதிய அதிபர் டிரம்ப் கியூபாவுடனான அமெரிக்காவின் சமாதான உடன்பாடு ஏற்கத்தக்கதல்ல என்று கூறி வருகிறார். இதனிடையே பல்வேறு பிரச்சினைகளை 21 பணியாளர்கள் அங்கு சந்தித்துள்ளதாக டில்லர்சன் சுட்டிக்காட்டுகிறார்.
சில பேர் தங்களது அறைகளில் பெரும் சப்தங்களையும், அதிர்வுகளையும் உணர்ந்ததாகவும், வேறு சிலர் அது போன்ற அறிகுறிகளை உணர்ந்ததாகவும் கூறப்பட்டது. சம்பவங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலையில் அதிகம் பேர் பாதிக்கப்படக்கூடும் என்ற நிலையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவங்கள் ஏதேனும் உளவு வேலைகளாக இருக்கும் என்றும், மின்காந்த அலைகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் கூட ஆராயப்படுகிறது. ஒருவேளை இச்செயல்களை கியூப அரசிற்கு கட்டுப்படாத அங்கம் ஏதேனும் ஒன்றோ அல்லது ஏதேனும் மூன்றாவது நாடோ செய்திருக்கலாம் என்று அமெரிக்கா கருதுகிறது.
இதனால் தூதரகத்தை மூடுவதோடு, அமெரிக்காவிலுள்ள கியூப தூதரக அதிகாரிகளையும் வெளியேற்ற வேண்டும் என்று சில குடியரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட முயன்ற ரூபியோவும் அடங்குவார்.
அமெரிக்க தூதரகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை ஒட்டி பிரான்ஸ்சும் தனது பணியாளர்கள் மத்தியில் மின்காந்த அலை பாதிப்பு போன்று ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதித்துள்ளது.