காசா போர் குறித்து கருத்து.. ஹாலிவுட் நடிகையை கடுமையாக சாடிய இஸ்ரேல் அதிபர்

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களால் காசா வேகமாக வெகுஜன புதைகுழியாக மாறி வருவதாக ஏஞ்சலினா ஜோலி கூறியிருந்தார்.
காசா போர் குறித்து கருத்து.. ஹாலிவுட் நடிகையை கடுமையாக சாடிய இஸ்ரேல் அதிபர்
Published on

ஹமாஸ் அமைப்பினர் கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி மக்களை கொன்று குவித்ததுடன், 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஒரு மாதமாக நீடிக்கும் இந்த போரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பை காசாவில் இருந்து முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் தரப்பு உறுதியாக உள்ளது.

போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சிலர் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் குரல் கொடுக்கின்றனர்.

அவ்வகையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில், இஸ்ரேலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

அதில், அகதிகளுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றிய தனது அனுபவம் பற்றி குறிப்பிட்ட அவர், தனது கவனம் முழுவதும், வன்முறையால் இடம்பெயர்ந்த மக்கள் மீது இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேலில் நடந்தது ஒரு பயங்கரவாத செயல் என்று கூறிய அவர், காசாவில் பொதுமக்கள் மீது குண்டுவீசி தாக்கி அப்பாவி உயிர்களை பறித்ததை நியாயப்படுத்த முடியாது என்று இஸ்ரேலை குற்றம்சாட்டினார். இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களின் விளைவாக காசா வேகமாக வெகுஜன புதைகுழியாக மாறி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் பதிலடி கொடுத்ததுடன், ஏஞ்சலினா ஜோலியை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது:-

ஏஞ்சலினா ஜோலியின் கூற்றுக்களை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். களத்தில் உள்ள உண்மை நிலவரங்களை பார்வையிடவும் பார்க்கவும் அவர் ஒருபோதும் காசாவில் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். காசாவில் இப்போது போர் நடக்கிறது. ஆனால் அங்குள்ள மக்கள் உயிர்வாழ முடியாத அளவுக்கு மனிதாபிமான நெருக்கடி எதுவும் இல்லை.

காசா சிறைச்சாலையாக மாறியது இஸ்ரேலால் அல்ல. இப்போது பயங்கரவாதத்தால் நிரம்பிய ஈரானியத் தளமாக காசா உள்ளது. ஒருவேளை இந்தப் போரின் விளைவாக, காசா மக்கள் கவுரவமான வாழ்க்கை வாழ்வதற்கு தகுதியான வேறு ஆட்சி அமையலாம். அது அமைதியை நோக்கி நகர்வதற்கும் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com