மெக்சிகோ காளை சண்டையில் விபரீதம்; தூக்கி வீசப்பட்ட வீரர் உயிருக்கு போராட்டம்

ஜோஸ் ஆல்பர்டோ ஆர்டிகா ஆடுகளத்தில் மண்டியிட்டபடி கையில் துணியுடன் காளைக்காக காத்திருந்துள்ளார்.
Courtesy:  ndtv
Courtesy:  ndtv
Published on

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவில் காளை சண்டை மக்களிடையே பிரசித்தி பெற்றது. ஒரு பெரிய ஆடுகளத்தில், நன்கு பயிற்சி பெற்ற வீரர் ஒருவர் கையில் துணியுடன் நின்றிருப்பார்.

அந்த துணியின் வண்ணம் காளைக்கு ஆவேசம் ஏற்படுத்த கூடிய வகையில் இருக்கும். களத்திற்குள் காளை ஒன்று அவிழ்த்து விடப்படும். அந்த காளையை ஆத்திரமூட்டும் வகையில், வண்ண துணியை தன்முன் திரையாக காட்டியபடி அந்த வீரர் நிற்பார்.

அதனை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்து வரும் காளை, முட்டி விட்டு செல்லும். எனினும், பயிற்சி பெற்ற வீரர் லாவகத்துடன் அதனை தடுத்து விடுவார். அவர் மீது முட்டி விடாத வகையில், துணியை காட்டி விட்டு, விலகி விடுவார்.

இந்த சூழலில், மெக்சிகோ நாட்டின் லக்ஸ்காலா மத்திய மாகாணத்தில் காளை சண்டை ஒன்று நடந்தது. இதில், ஜோஸ் ஆல்பர்டோ ஆர்டிகா (வயது 26) என்பவர் ஆடுகளத்தில் மண்டியிட்டபடி கையில் துணியுடன் காளைக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது, ஆவேசத்துடன் வந்த காளை அவரை நெருங்கியது. அப்போது அவர் விலகுவதற்குள் துணியுடன் அவரையும் சேர்த்து முட்டி சென்றது. இதில், ஆல்பர்ட்டோவின் கழுத்து பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. காது, வாய் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. தலையிலும் காயம் ஏற்பட்டு உள்ளது.

காளை முட்டியதும் தூக்கி வீசப்பட்ட அவர், சிறிது நேரத்திற்கு எழுந்து களத்தில் இருந்து நடந்து வெளியேறினார். ஆனால், அதன்பின்னர் சரிந்த அவரை உடனிருந்தவர்கள் உடனடியாக தூக்கி சென்றனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையும் நடந்தது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட கூடிய நிலை காணப்படுகிறது என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது. மெக்சிகோ நகரில், விலங்கு நல ஆர்வலர்களின் சட்ட போராட்டம் எதிரொலியாக காளை சண்டைக்கு தடை விதிக்க கூடிய சூழல் உள்ளது. இந்நிலையில், காளை சண்டையில் கலந்து கொண்ட வீரர் காயமடைந்து உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com