

சிங்கப்பூர்,
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலும், கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்புகளும் குறைந்து வருகின்றன. இதனால் பல நாடுகளும் பயண தடைகளை நீக்கி வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. இது 16-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள், எந்தவொரு நகரத்தில் இருந்தும் சிங்கப்பூருக்கு தாராளமாக செல்லலாம். அவர்கள் அங்கே போய் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இதற்கான அறிவிப்பை அந்த நாட்டின் போக்குவரத்து மந்திரி எஸ்.ஈஸ்வரன் நேற்று வெளியிட்டார்.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், தனது எல்லைகளை பாதுகாப்பான முறையில் மீண்டும் திறக்கவும், உலகளாவிய வணிகம் மற்றும் விமான போக்குவரத்து மையமாக அதன் நிலையை மீட்டெடுக்கவும் சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவை தவிர இந்தோனேசியா, மலேசியா, ஜகார்த்தா, பாலி, வியட்நாம், கிரீஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.