

துபாய்,
இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை மேற்கோள்காட்டி அமீரகம் மற்றும் ஓமனில் இருந்து இயக்கப்படும் விமான நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். ஒரு சில பயணிகள் விமான நிலையங்களிலும், விமானத்தில் ஏறிய பின்னரும் முக கவசங்களை மூக்குக்கு கீழ் இறக்கி விடுகின்றனர். இது குறித்து விமான ஊழியர்கள் அவர்களிடம் எடுத்துக் கூறிய போதிலும் சிலர் அதனை சரிவர பின்பற்றுவதில்லை.
இதுபோன்று செயல்படும் பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி விடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர். புறப்படும் விமான நிலையத்துக்குள் நுழைவது முதல் பயணம் மேற்கொள்ளும் விமான நிலையத்தில் இறங்கும் வரை கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத பயணிகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர்.