

வாஷிங்டன்,
அரபு-இஸ்ரேல் இடையே 1948-ம் ஆண்டு நடந்த போரின்போது இடம் பெயர்ந்த லட்சக்கணக்கான பாலஸ்தீனிய அகதிகளைக் காப்பாற்றுவதற்காக உருதுவானது, யு.என்.ஆர்.டபிள்யு.ஏ. என்னும் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமை ஆகும்.
இந்த முகமை பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்குகரை பகுதிகளிலும், ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய நாடுகளிலும் உள்ள பாலஸ்தீன அகதிகளை காத்து வருகிறது. அவர்களது கல்வி, சுகாதாரம், சமூகசேவைகள் அனைத்தையும் இந்த முகமை கவனித்து வருகிறது.
இந்த முகமைக்கு அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் நிதி உதவி அளித்து வந்தன.
அமெரிக்காதான் மிகப்பெரிய நன்கொடையாளராக திகழ்ந்து வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு இந்த அகதிகள் முகமைக்கு அமெரிக்கா 368 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2 ஆயிரத்து 576 கோடி) நிதி வழங்கி உள்ளது.
இந்தநிலையில் ஐ.நா. பாலஸ்தீன அகதிகள் முகமைக்கான நிதி உதவியை நிறுத்திக்கொள்வதாக சற்றும் எதிர்பாராத வகையில் அமெரிக்கா அதிரடியாக முடிவு எடுத்து அறிவித்து உள்ளது.
இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் நேற்றுமுன்தினம் வாஷிங்டனில் கூறும்போது, ஐ.நா. பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதி உதவி அளிக்கிற விவகாரத்தை அமெரிக்க நிர்வாகம் மிகவும் கவனமாக மறு ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து இதற்கு மேலும், ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதி உதவி அளிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து உள்ளோம் என்று தெரிவித்தார்.
ஐ.நா. பாலஸ்தீன அகதிகள் முகமை, சரி செய்ய முடியாத அளவுக்கு தவறு செய்து விட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு பாலஸ்தீன அதிபர் மக்முத் அப்பாஸ் சார்பில் அவரது செய்திதொடர்பாளர் நபில் அபு ரூதீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், இது பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும் என்று குறிப்பிட்டார்.
ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமையின் செய்தி தொடர்பாளர் கிறிஸ் கன்னஸ், அமெரிக்காவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து கருத்து வெளியிட்டு உள்ளார்.
அவர், ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமை சார்பில் நடத்தப்படுகிற பள்ளிக்கூடங்கள், சுகாதார மையங்கள், நெருக்கடி கால உதவி திட்டங்கள் சரி செய்ய முடியாத அளவுக்கு தவறு செய்து விட்டன என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன். இந்த திட்டங்கள் மிகவும் வெற்றிகரமானவை. சாதனை படைத்தவை. சர்வதேச சமூகங்கள், எங்கள் நன்கொடையாளர்கள் தொடர்ந்து எங்கள் சாதனைகளையும், தரத்தினையும் பாராட்டி வந்து உள்ளனர் என கூறி உள்ளார்.
இதற்கிடையே ஜெர்மனி தனது நன்கொடையை அதிகரிக்கப்போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் கூறுகையில், ஐ.நா. வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு ஏற்பட்டு உள்ள நிதி நெருக்கடி, அந்த முகமைக்கு ஒரு நிச்சயமற்ற நிலைமையை ஏற்படுத்தி விடும். எனவே அந்த முகமைக்கான எங்கள் நிதி உதவியை அதிகரிப்போம் என்று குறிப்பிட்டார்.