

வாஷிங்டன்,
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான விசா கால அளவை குறைக்க டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட காலமாக கடந்த கால ஆட்சியாளர்கள், வெளிநாட்டு மாணவர்களை கிட்டத்தட்ட காலவரையின்றி அமெரிக்காவில் தங்கி இருக்க அனுமதித்து உள்ளனர். இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறது. அமெரிக்கர்களுக்கு பாதகம் ஏற்படுகிறது. அமெரிக்காவின் தாராள மனப்பான்மையை பயன்படுத்தி, வெளிநாட்டு மாணவர்கள் நிரந்தரமாகவே மாணவர்களாகி விட்டனர். நிரந்தரமாக உயர் கல்வி நிறுவனங்களில் பதிவு செய்து கொண்டு, அமெரிக்காவிலேயே இருந்து விடுகின்றனர்.
டிரம்ப் அரசு கொண்டு வரும் புதிய விதிமுறை, இந்த துஷ்பிரயோகத்துக்கு முடிவு கட்டும். வெளிநாட்டு மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வைத்திருப்பவர்கள் எவ்வளவு காலம் தங்கி இருக்கலாம் என்பது வரையறுக்கப்படும். வெளிநாட்டு மாணவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள்வரை தங்கி இருக்க அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர் விசாவில் வருபவர்கள், அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி முடிவடையும்வரை தங்கி இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு முதலில் 240 நாட்கள் மட்டும் விசா வழங்கப்படும். பின்னர், மேலும் 240 நாட்கள் நீட்டிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட விசா கட்டுப்பாடுகள், கடந்த 2020-ம் ஆண்டு டிரம்ப் முதல்முறையாக ஜனாதிபதி ஆனபோது கொண்டுவரப்பட்டன. ஆனால், பின்னர் வந்த ஜோ பைடன் அரசு அவற்றை திரும்பப் பெற்றது. இதற்கிடையே, இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற அமெரிக்க எச்1பி விசா திட்டத்திலும் மாற்றம் செய்ய டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது.