ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த டிரம்ப்

ஹர்முஸ் ஜலசந்தியை முற்றிலும் மூடுவதாக ஈரான் அறிவித்தது.
ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அதேவேளை, அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மோதலை குறைக்க அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

மோதல்

இதனிடையே, அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. அதன்படி, தற்காப்பு நடவடிக்கை எனக்கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த மோதலின்போது கடந்த 10ம் தேதி ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானின் பண்டர் அப்பாஸ், சிரிக், மினப், குவாசம் தீவு, கொர்ஜன், கார்க் தீவு ஆகிய பகுதிகள் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குவைத், பஹ்ரைன், ஜோர்டன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை முற்றிலும் மூடுவதாக ஈரான் அறிவித்தது.

டிரம்ப் மிரட்டல்

மோதல் தீவிரமடைந்த நிலையில் ஈரான் மீது இன்று இரவு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்வதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும், இதனால் ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்வதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டன், எகிப்து போன்ற நாடுகளின் முயற்சியால் இறுதிவடிவம் பெற்றுள்ளது. ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரானுடன் இறுதியான ஒப்பந்தம் கையெழுத்தாகும்வரை அந்நாட்டின் துறைமுகங்கள் அமெரிக்க கடற்படையால் தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com