எல்லை சுவர் கட்டுவதற்காக தேசிய அவசர நிலையா? டொனால்டு டிரம்ப் பதில்

எல்லை சுவர் கட்டுவதற்காக தேசிய அவசர நிலை அறிவிப்பை நெருங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எல்லை சுவர் கட்டுவதற்காக தேசிய அவசர நிலையா? டொனால்டு டிரம்ப் பதில்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார்.

அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் கடந்த 20 நாட்களாக பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன.

சமீபத்தில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு டிரம்ப் ஏற்பாடு செய்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. தனது நிபந்தனைகள் ஏற்கப்படாததால் பாதியில் வெளியேறினார் டிரம்ப்.

அரசுத் துறைகள் முடக்கம் நீடிக்கும் நிலையில், டாவோஸ் சுற்றுப்பயணத்தை டிரம்ப் ரத்து செய்துள்ளார். உலக பொருளாதார மன்ற மாநாட்டிற்காக டாவோஸ் செல்லும் மிகவும் முக்கியமான பயணத்தை ரத்து செய்திருப்பதாக டிரம்ப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.

இதற்கு மத்தியில், தெற்கு எல்லை மாகாணமான டெக்ஸாசூக்கு டிரம்ப் பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் டிரம்பிடம், அவசர நிலை அறிவிப்பை நெருங்குகிறீர்களா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த டிரம்ப், இதை (அவசரநிலை) வேகமாக செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் இதற்கு எந்த செலவினமும் ஆகாது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com